Tuesday, December 13, 2011

குடும்பம்



நன்முத்துக்கள் என மக்கட்செல்வம் நால்வரும்
மாமி என்றெண்ணாமல் உற்ற தோழியாய்
உருகுகின்ற மருமக்கள் மூவரும்
பெற்றவளும் உற்றவருமான எங்கள் இருவரையும்
அன்பிற்கும் பாசத்திற்கும் இலக்கணமான தங்கை ஒருத்திக்கும்
பாசமுடன் சுற்றிவரும் பேர குழந்தைகள் எண்வரும்
துயருற்று தவிக்கும் இவ்வேளையில்
பதினெட்டுக் கரங்கள் உடைய பரமேஸ்வரியின் பெயரைத் தாங்கிய நீ
சட்டத்திற்குள்ளிருந்து நீ சிரிக்கும் மர்மம் என்ன
உனையே நினைந்து வருந்திடும் உன் தாய்க்கு
பதில் என்ன சொல் சொல் சொல் மகளே

தாயின் ஏக்கம்



அம்மா என்று அழைக்கும் அமுதக் குரல் அழகும்
ஆசையும் அன்புமாக அமுது படைத்த அழகும்
பாசமும் பரிவுமாக நலம் விசாரிக்கும் அழகும்
இவற்றையெல்லாம் துறந்து எங்கே மறைந்தனையோ?
என்னை மறந்தனையோ?
எப்படித்தான் உன் மனம் துணிந்ததோ
என்னை விட்டுப் பிரிய?

கலையாத கல்வியும் குறையாத செல்வமும்
நிறைவான வாழ்க்கையும் பரிவும் பிரியமுமான
பாசமுள்ள மக்களை விட்டுப் பிரிந்த
உன்னைத் தேடுகின்றேன் தேடுகின்றேன்
எங்கே தேடுவேன் எங்கு மறைந்தனையோ?

புகழ் அஞ்சலி



என்ன புண்ணியம் செய்தாயோ?
இந்த பேறு பெற
எத்தனை தவம் செய்தாயோ
மகளின் கையால் நீராட்ட
மகனின் கையால் தீமூட்ட
கணவர் அருகிருந்து பொட்டிட்டு
பூச்சூட்டி புதுப் புடவை சார்த்தி
மறுபடி மாங்கல்யம் கட்ட
என்ன புண்ணியம் செய்தாயோ?
உற்றாரும் உறவினரும் புடை
சூழ்ந்து கூடி நிற்க
கல்யாண கோலத்தில் ரதம் ஏறி புறப்பட
என்ன புண்ணியம் செய்தாயோ?

வந்தனம்



ஈசனாரின் மூத்த புதல்வனின்
திருநாமத்தைத் தாங்கிய எங்கள்
தந்தையாகிய கணேசனின் தர்மபத்திநியாக
இல்லறத்தில் தன் கமலப்பாதங்களை பதித்து
அன்பும் அறமும் இன்பமும் ஈகையும்
கொடையும் தர்மமும் கொடுத்துப் பழகிய
எங்கள் குடும்பத்தின் குலவிளக்கே அன்னையே
உன் பாதங்களுக்கு ஆயிரம் கோடி நமஸ்காரங்கள்.

வாழ்த்து



பெற்றால் மட்டும் போதுமா?
எங்கள் கமலா குழந்தைகளை வளர்த்திட்ட அழகும்
உற்றவர் மற்றவர் என எண்ணாமல்
யாவரிடமும் அன்பும் மரியாதையுமாகப் பழகும் விதமும்
பிறர் பெருமையாக சொல்லும் போது
ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் என் மகளை
நினைந்து நினைந்து பெருமையால் பூரிக்கின்றேன்.

உன்னை உச்சிக்கு கொண்டு செல்ல நினைத்தேன்
நீயோ உச்சியின் சிகரத்தையும் தாண்டி
மேலே ஜோதியாய் ஒளிர்கின்றாய்
உன் ஒளிப் பார்வையால்
குழந்தைகள் மகிழ்வுடனும் வாழ்வில் பிரகாசமான
ஒளிர்வுடனும் சிறந்து விளங்க வழி காட்டு

Saturday, June 12, 2010

திருந்தா உலகம்




படித்துப் பெற்றேன்
குடித்துக் கெட்டேன்
திருந்திவிட்டேன்.
வேலை கேட்டேன்
நம்ப மறுத்தது
ஊரும் உலகமும்..

திருந்திவிட்டேன் நான்
திருந்தவில்லை ஊர்

இல்லாதது ...



எல்லாம் இருந்தும்
இல்லாதது அவனிடம்
மனசாட்சி